புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த பிப்ரவரி 22- ஆம் தேதி விலகியது. மேலும் தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை, அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி வழங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சரவையின் ராஜினாமாவை துணைநிலை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமைக் கோராததால், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தார். இது தொடர்பாக, மத்திய உள்துறைத்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கடிதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் பட்சத்தில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். இது தொடர்பாக, மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஒருசில மாதங்களில் புதுச்சேரிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.