புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெங்கடேசன் தனது பதவியை நேற்று (21/02/2021) ராஜினாமா செய்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவையின் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினார். அதேபோல், இன்று (22/02/2021) கூடிய புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். இதன் காரணமாக, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு விரைந்த நாராயணசாமி தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார்.
இந்த நிலையில் தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக (Suspension) நீக்கி வைக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.