புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை புதுச்சேரியில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, புதுச்சேரி அரசு தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அணியாவிடில் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படுகிறது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களும் இரவு 08.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம். பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது. மேலும் இரவு 11.00 மணி முதல் காலை 05.00 மணி வரை கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. இதில், மக்கள் நடமாட்டத்திற்கும், கடைகள் திறப்பதற்கும் அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. ஆனாலும் தற்போதுவரை கடைவீதிகளில், பேருந்து நிலையங்களில் பெரும்பாலான பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலே செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.