புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பேருந்து இயக்கக் கோரி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் சாரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். மாணவர்களுக்கான இலவச ஒரு ரூபாய் பேருந்தை இயக்க வேண்டும். பள்ளி சீருடை, மதிய உணவில் முட்டை, இலவச நோட்டு புத்தகம், சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே "பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து அடுத்த வாரம் முதல் இயக்கப்படும்" என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் பங்கேற்கும் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, மாணவர்கள் உருவாக்கியிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார். அப்போது நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து அடுத்த வாரம் முதல் இயக்கப்படும். கல்வித் துறையில் இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள் உள்ளிட்டவை கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு இருந்தது மீண்டும் அவற்றைத் தொடங்க ரூ.1160 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டு அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தப் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.