காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் தங்களது பதவியை இன்று (21/02/2021) ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கொடுத்தனர். இதனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது. இதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாநில அமைச்சர்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதற்கு முன் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து நாளை (22/02/2021) காலை ஆலோசித்தப் பின் இறுதி முடிவு எடுப்போம். கூட்டணிக் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்து எங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்போம். எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை" என்றார்.