புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
புதுச்சேரி மாநில மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்குவதற்கான கோப்புகள் தயார் செய்து அக்டோபர் மாத இறுதியில் ஆளுநருக்கு அனுப்பபட்டது. ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அந்த கோப்பை திருப்பி அனுப்பிவிட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொங்கல் இலவச பரிசு வழங்க கிரண்பேடி ஒப்புதல் தர வேண்டும். இல்லையென்றால் கிரண்பேடி புதுச்சேரி மக்களுக்கு விரோதியாவார். கிரண்பேடி தொடர்ந்து தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள் மக்கள் நலத்திட்டங்களை முடக்கி, ஆளும் அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் வழங்குவதை கிரண்பேடி தடுத்து நிறுத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடியிடம் பலமுறை புகார் அளித்தும் அவர் மீது மோடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது துரதிஷ்டமானது. கிரண்பேடி மாநில மக்களின் உரிமைகளை தடுக்க நினைத்தால் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். புதுச்சேரி மக்கள் பொங்கி எழுந்தால் கிரண்பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார். புதுச்சேரி மாநிலத்தில் வீட்டுவரி 25 சதவீதம் அனைத்து வீடுகளுக்கும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.