Puducherry chief minister house besieged by ration shop workers

புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் 550க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் அரிசிக்கு பதிலாக பணமாக அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. அதுவும் மாதந்தோறும் சரிவர செலுத்தப்படுவது இல்லை என்கிற புகார்களும் உள்ளன. அரிசி உள்ளிட்ட எந்தப் பொருட்களும் ரேஷனில் வழங்கப்படாததால் ரேஷன் கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கின்றன.

Advertisment

ஊழியர்களுக்கும் கடந்த 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளைத்திறக்கக் கோரியும், ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ளசம்பளத்தைவழங்க வலியுறுத்தியும்ஊழியர்கள் மட்டுமின்றி தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்டஎதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இன்னமும் இதற்குத்தீர்வு காணப்படவில்லை. விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று பா.ஜ.கவை சேர்ந்த குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் பலமுறை உறுதி அளித்தார். ஆனால், இதுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.

Advertisment

இந்நிலையில், புதுச்சேரி அப்பா பைத்தியம் சாமி கோயில் அருகே உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை ரேஷன் கடை ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள், "கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. அதனால் உங்களுக்குத்தான் நாங்கள் ஓட்டு போட்டோம். ஆனால் நீங்களும் கடையை ஏன் திறக்க மறுக்கிறீர்கள்?" எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும், நிலுவையிலுள்ளசம்பளத்தை வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடைகளைத்திறக்க முடியாவிட்டால் எங்களை வேறு துறைக்கு மாற்றி விடுங்கள்" என்றனர்.

Puducherry chief minister house besieged by ration shop workers

அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை. பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். அதனால் ஆவேசமடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் கோரிமேடு - திண்டிவனம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எஸ்.பி பக்தவச்சலம், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை தி.மு.க மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா, எம்.எல்.ஏக்கள் சம்பத், செந்தில்குமார், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராஜாங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் இப்பிரச்சனையை சட்டசபையில் எழுப்புவதாக சிவா எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.

இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, "ரேஷன் கடை திறப்பு, நிலுவைச் சம்பளம் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்டமாக தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர் ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்" என்றனர். தொடர்ந்து மதியத்திற்கு மேல் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.