புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம் (வில்லியனூர் தொகுதி), தீப்பாய்ந்தான் (ஊசுடு தொகுதி) ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கடந்த மாதம் 25-ஆம் தேதி வழங்கினர். இதில் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்.
புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் இதுவரை ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸின் பலம் 10 ஆக குறைந்துள்ளது. 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், மூன்று திமுக எம்.எல்.ஏக்கள், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவு என மொத்தம் 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதேபோல் எதிர்க்கட்சி பலமும் 14 எம்.எல்.ஏக்கள் என உள்ளது. இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என சபாநாயகர் சிவக்கொழுந்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமயிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய இருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டி இருக்கிறது. துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் மத்திய அரசின் கெடுபிடியால் எம்.எல்ஏ.ஏக்கள் ராஜினாமா செய்வதாகவும் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.