ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதால், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை நேற்று (12.03.2024) ராஜினாமா செய்திருந்தார். மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.க வெறும் 40 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதனால், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணியை உருவாக்கி பா.ஜ.க. ஹரியானாவில் ஆட்சி அமைத்தது. அதில், பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர்.
இத்தகைய சூழலில் இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடன் நேற்று முன்தினம் (11.03.2024) ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், மக்களவைத் தேர்தல் வருவதற்கு முன்பாகவே ஜனநாயக் ஜனதா கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் குருசேத்ரா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யும், ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவருமான நயாப் சைனி பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதியதாக அமைய உள்ள பா.ஜ.க. ஆட்சிக்கு 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உடன் ஹரியானா லோகித் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தர உள்ளதாகத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நயாப் சைனி ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா, முதல்வராகப் பதவியேற்க நயாப் சைனிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து நயாப் சிங் சைனி சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஹரியானா முதல்வராக நேற்று பதவியேற்றார். நயாப் சிங் சைனிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பாஜக மூத்த தலைவர்களான ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரிலால், மூல்சந்த் சர்மா, கன்வர் பால் குஜ்ஜர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ரஞ்சித் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டரும் கலந்து கொண்டார். மேலும் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் ஹரியானா சட்டப் பேரவையில் இன்று (13.03.2024) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நயிப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயிப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ள நயாப் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முதலமைச்சராக பதவியேற்று, ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல். எனவே நயாப் சைனியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.