Skip to main content

“வெறும் 10 ஆண்டுகளில் பணக்கார கட்சியாக பா.ஜ.க மாறியது எப்படி?” - பிரியங்கா காந்தி கேள்வி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Priyanka Gandhi Questioned How did BJP become the richest party in just 10 years?

மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, பல்வேறு தொகுதிகளில் முதல் ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இறுதி கட்டத் தேர்தலானது வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (27-05-24) நடைபெற்றது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “எனது இதயம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. இது ஒரு அழகான மாநிலம். கலாச்சாரத்திலும், நேர்மையிலும் பெயர் பெற்ற மாநிலம் இது. இமாச்சலப் பிரதேசத்திடமிருந்து நாடு கற்றுக்கொள்ள வேண்டும். மோடி மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பண பலத்தைப் பயன்படுத்தி கவிழ்க்க முழு முயற்சிகளை மேற்கொண்டார்.

காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும், உலகின் பணக்கார கட்சியாக மாற முடியவில்லை. வெறும் 10 ஆண்டுகளில் உலகின் பணக்கார கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துள்ளது. இது எப்படி நடந்தது? இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? இது யாருடைய பணம்?. கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க ரூ.60,000 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அப்போது, காங்கிரசை ஊழல்வாதி என்கிறார்கள். கடவுளின் பெயரால் வாக்கு கேட்கிறார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எந்தக் கடவுள் சொல்வார்? எல்லா தெய்வங்களும், மகான்களும், பெரிய மனிதர்களும் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே கூறியுள்ளனர். அது சத்தியத்தின் பாதையைப் பின்பற்றுங்கள். இமாச்சல பிரதேச மக்கள் உண்மையின் பாதையில் நடப்பவரை அங்கீகரிக்க வேண்டும். 

அவர்கள் மட்டுமே ஆட்சியில் நீடிக்க விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் ஆட்சியில் நீடிக்க எதையும் செய்வார்கள். இந்த அரசியலின் விளைவுதான் அக்னிபாத் திட்டம். இதற்கு அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அந்தப் பணம் எல்லாம் பெரும் பணக்காரர்களிடமிருந்து வருகிறது. அதனால், அந்தப் பணக்காரர்களுக்காக மட்டுமே அவர்கள் திட்டங்களை உருவாக்கியுள்ளனர்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்