உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். அதன்படி, கன்வார் யாத்திரை வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்று ஹரித்வார் காவல்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த யாத்திரையை மேற்கொள்பவர்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உ.பி அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சாதி, மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரான குற்றமாகும். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்று, பிறப்பித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது. உத்தரபிரதேசத்தில் வண்டிகள், கடைகளின் உரிமையாளர்களின் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என்ற பிரித்தாளும் உத்தரவு நமது அரசியலமைப்பு, நமது ஜனநாயகம் மற்றும் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தின் மீதான தாக்குதலாகும்” என்று பதிவிட்டுள்ளார்.