மத்திய அரசின் தபால் துறை, தொடர்புத்துறை, வருவாய் துறை, நிதிசேவைகள் துறை, பொதுத் துறை உள்ளிட்ட துறைகளில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் முகாம்கள் பலகட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் தேர்வான 51,000 பேருக்கு பிரதமர் மோடி நேற்று (26-09-23) காணொளி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய மோடி, “ நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், இந்த நாட்டில் பாதி அளவு மக்கள் தொகை கொண்ட பெண்களுக்கு பெரிய உத்வேகத்தை கொடுக்கும். கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் சாதனை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள் தலைமையில் நாடு வளர்ச்சி அடைவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும்.
தற்போது புதிய இந்தியாவின் கனவுகள் மிகப்பெரியவையாக இருக்கிறது. விளையாட்டு முதல் விண்வெளி வரை என, ஒவ்வொரு துறைகளிலும் பெண்களின் பங்கு மகத்தானது. அதே போல், அவர்கள் ஆயுதப்படையிலும் இணைக்கப்பட்டு வருகின்றனர். பெண்களின் பங்களிப்பு இருந்தால் எந்த ஒரு துறையிலும் நேர்மையான மாற்றங்கள் உருவாகும். பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாயில்களை திறப்பதே மத்திய அரசின் முக்கிய கொள்கை ஆகும்.
தொழில்நுட்பங்களின் பயன்பாட்டால் அரசுத் திட்டங்களில் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. நேரடி பணப்பரிமாற்றம், டிக்கெட் முன்பதிவு, டிஜிலாக்கர், மின்னணு முறையில் வாக்காளர்களின் விவரங்களை அறிதல் போன்ற பல்வேறு திட்டங்களில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது புதிதாக பணி நியமனம் பெற்றிருப்பவர்கள், ‘குடிமக்களே முதன்மையானவர்கள்’ என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும். அரசு நிர்வாகத்தை மேம்படுத்த தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார்.