தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையும், வட மாநிலங்களில் மகர சங்கராந்தியையும், மக்கள் வழக்கான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் மக்களுக்கு பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு வாழ்த்துகள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்" என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார்.