மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த பத்திரிகையாளரும், இந்துத்வத்திற்கு எதிராக குரல் கொடுத்த வந்தவருமான கௌரி லங்கேஷ், கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இந்தப் படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்திவந்தது.
இந்தக் குழு நடத்திய விசாரணையில் நவீன்குமார், அமோல் கலே, மனோகர் எட்வி, சுஜீத்குமார் மற்றும் அமித் தேக்விகர் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில முக்கிய தடயங்களும், கௌரி லங்கேஷ் கொலையில் மூளையாக செயல்பட்ட பரசுராம் வாக்மாரே என்ற குற்றவாளி பற்றிய தகவல்களும் சிக்கின.
இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, தற்போது பரசுராம் வாக்மாரேவைக் கைது செய்துள்ளது. பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்திய நிலையில், 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.