நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கும் ஆய்வறிக்கை இதுவாகும்.
இதனையொட்டி 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தி வருகிறார். அதில், “இந்திய மக்கள் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக பிரதமராக அவரை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய 4 பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அனைத்து முக்கிய பயிர்களுக்கும் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP)அறிவித்தோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரகாசிக்கும் வகையில் தொடர்கிறது. இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவும் நிலையானதாகவும் 4% இலக்கை நோக்கி செல்கிறது. நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடையும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான 5 திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை பிரதமரின் தொகுப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
புதியதாக 109 அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் காலநிலையை தாங்கக்கூடிய 32 தோட்டக்கலை பயிர்கள் விவசாயிகளின் சாகுபடிக்கு வெளியிடப்படும். அடுத்த 2 ஆண்டுகளில், 1 கோடி விவசாயிகள் சான்றிதழுடன் கூடிய இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ. 1.52 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள்ளது. உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.