![Price peaks at 17 months!](http://image.nakkheeran.in/cdn/farfuture/DlLjEsmD-c0yHF1dPswMSHpY3tfO4GlkDx2zvNAkXpk/1649852239/sites/default/files/inline-images/STICK443.jpg)
நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்திற்கான விலைவாசி புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மார்ச்சில் சில்லறை விலை பணவீக்கம் 6.95% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவாகும். சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்ததே பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக, கூறப்படுகிறது.
பணவீக்கம் சமையல் எண்ணெய் பிரிவில் 18.8% ஆகவும், காய்கறிகள் பிரிவில் 11.6% ஆகவும் இருந்தது. இறைச்சி மற்றும் காய்கறிகள் பிரிவில் பணவீக்கம் 9.6% ஆகவும், உடைகள் மற்றும் காலணிகள் பிரிவில் 9.4% ஆகவும் இருந்தது. மேலும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பணவீக்கம் 8% ஆகவும், சுகாதாரப் பிரிவில் 7% ஆகவும் உயர்ந்துள்ளது.
கிராமப் புறங்களில் சில்லறை விலை பணவீக்கம் 7.7% ஆக இருந்த நிலையில், நகர்ப்புறங்களில் அது 6.1% மட்டுமே இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதால், நிலைமையைச் சமாளிக்க வங்கிக் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் எனத் தெரிகிறது.