










நாட்டின் 73வது குடியரசுத் தினத்தையொட்டி, டெல்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தின அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை நடந்தது. முப்படை அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.
கரோனா பரவலால், வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பது ரத்து செய்யப்பட்டது. அதேபோல், குடியரசுத் தின விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் 24,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விழாவில் விமானப் படையைச் சேர்ந்த 75 போர் விமானங்களும் சாகசங்களை நிகழ்த்தினர்.
சென்னை ஆவடியில் தயாரான அர்ஜுன் ரக பீரங்கியும், டெல்லி குடியரசுத் தின அணி வகுப்பில் கலந்து கொண்டது. அதேபோல், 1965, 1971 போரில் பயன்படுத்திய பீரங்கிகள், தற்போதைய நவீன ஆயுதங்கள் அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.
டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், மேகாலயா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட், அருணாச்சலப்பிரதேசம், கர்நாடகா, ஜம்மு- காஷ்மீர், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணி வகுப்பில் பங்கேற்றன. அத்துடன், மத்திய அரசுத் துறைகளின் ஊர்திகளும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
சிறப்பாகப் பணியாற்றிய வீரர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்களையும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். ஸ்ரீ நகரில் 3 பயங்கரவாதிகளைக் கொன்று வீரமரணம் அடைந்த ஏ.எஸ்.ஐ. பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் இருந்து ஏ.எஸ்.ஐ. பாபு ராம் மனைவி ரினா ராணி, மகன் மாணிக் விருதைப் பெற்றுக் கொண்டனர்.