நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகளை வழங்கும் விழா, டெல்லியில் இன்று (08.11.2021) நடைபெற்றுவருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், சாதனையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.
இந்த விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பாடகி சித்ரா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் நட்சத்திரம் பி.வி. சிந்துவிற்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா, இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், நடிகை கங்கனா ரணாவத், சாலமன் பாப்பையா, பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ்நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்பாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் 119 பத்ம விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.