18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே, 543 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை ஒவ்வொரு ஊடகங்களும் கடந்த 1ஆம் தேதி வெளியிட்டது. அதில், இந்தியாவில் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள் பா.ஜ.க 350க்கும் மேல் இடங்களைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டது. அதே போல், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறியிருந்தன. இந்த கருத்துக்கணிப்புக்கு எதிர்க்கட்சிகள் பலர், கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில், இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யானவை என்றும் இந்த தேர்தலில் 295 இடங்களைக் கைப்பற்றுவோம் என்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கூறி வருகின்றனர். மேலும், 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று பா.ஜ.கவினர் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், பிரபல தேர்தல் வியூக கணிப்பாளரான பிரஷாந்த் கிஷோர், இந்த முறை பா.ஜ.க பெரும்பான்மையுடன் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 303 இடங்கள் அல்லது இன்னும் கொஞ்சம் கூடுதலான இடங்களை பா.ஜ.க பெறும் என்றும் கூறி வந்தார். தற்போது வெளியாகி இருக்கும் தேர்தல் கருத்துக் கணிப்பும், பிரஷாந்த் கிஷோரின் கருத்துக் கணிப்பும் ஒருசேர இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரஷாந்த் கிஷோர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அடுத்த முறை தேர்தல் மற்றும் அரசியல் பற்றிப் பேசப்படும் போது, வீணான போலி பத்திரிக்கையாளர்கள், சத்தம் போட்டுப் பேசும் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஊடக வல்லுநர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் பகுப்பாய்வுகளில் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.