பாஜக இந்தியாவில் பல மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி செய்து வருகிறது. தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும், பிற கட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களைத் தன் பக்கம் இழுத்து ஆட்சியை அமைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியிலிருந்த தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் தலைமையில் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு உத்தவ் தாக்கரேவின் அரசு கவிழ்க்கப்பட்டது. சிவசேனாவிற்குள் திட்டமிட்டு பிளவு ஏற்படுத்தி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் தான் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்த மூத்த தலைவரும் சரத் பவாரின் சகோதரரின் மகனுமான அஜித் பவார் தன்னை தனது ஆதரவாளர்களான 9 எம்.எல்.ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி, அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. மகாராஷ்டிராவில் முதலில் சிவசேனா கட்சியை உடைத்த நிலையில், அடுத்ததாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் வெளியேறி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது எந்த வித பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நடந்தவை சரியானதா அல்லது தவறானதா என்பதை மகாராஷ்டிரா மாநில மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அஜித் பவார் வெளியேறியது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பொதுவாக சில எம்.எல்.ஏக்கள் மட்டும் வெளியேறுவதால் அந்த கட்சி மக்கள் மத்தியில் இருந்த தனது ஆதரவை இழக்காது. அஜித் பவார் தலைமையிலான எம்எல்ஏக்கள் வெளியேறியது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த தீவிரமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் மகாராஷ்டிராவில் நடந்த பிளவு அந்த மாநிலத்திற்கு வெளியே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் கடந்த ஆண்டு பீகாரில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் வேறு எந்த மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
எதிர்க்கட்சியில் இருப்பவர்களை மட்டும் குறிவைப்பது கவலையளிக்கும் விஷயமாக மாறி வருகிறது. அதே சமயம் மத்தியில் ஆளும் ஆட்சியுடன் சமாதானம் செய்தவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படுகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் ஒரு தலைவருக்கு எதிராக எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறாது என்பது எனது எண்ணம்” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மட்டுமே வெற்றியைத் தேடித் தராது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு வலுவான காரணம் வேண்டும். அந்த காரணத்தை மக்கள் மத்தியில் ஆழமாகக் கொண்டு சென்றால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். பாஜகவுக்கு எதிரான சூழலை உருவாக்கினால் மட்டுமே எதிர்க்கட்சிகள் வெற்றி முடியும். பீகாரில் ஜெயபிரகாஷ் தலைமையிலான ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற எமர்ஜென்சி தேவைப்பட்டது. வி.பி.சிங் ஆட்சியைப் பிடிக்க போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதனால் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான காரணம் இல்லாத வெறும் அரசியல் எண்கணிதம் மக்களின் ஆதரவைப் பெற வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.