
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரசாந்த் கிஷோரும் கடந்த 13ஆம் தேதி சந்தித்தனர். அண்மையில் பிரசாந்த் கிஷோரை இரண்டு முறை சந்தித்த சரத் பவார், எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒன்றை நடத்தினார். இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி என கருதப்பட்டது. இருப்பினும் அதனை மறுத்த சரத் பவார், காங்கிரஸ் இன்றி மாற்று சக்தி உருவாகாது என தெரிவித்தார்.
இந்தச் சூழலில் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பின்போது பிரியங்கா காந்தி உடனிருந்ததாகவும், இந்தச் சந்திப்பில் சோனியா காந்தி காணொளி வாயிலாக கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரும் ராகுல் காந்தியும் கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை சந்தித்து, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு அளிப்பது குறித்து பேசியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முடிந்தவுடன் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது குறித்து அம்பிகா சோனி, கேசி வேணுகோபால் மற்றும் ஏகே ஆண்டனி ஆகிய மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.