லாக்டவுன் தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்ததற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காணொளிக்காட்சி மூலமாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "தற்போதைய சூழலில் வைரஸ் அதிவேகமாக உயரும் ஒரே நாடு இந்தியா தான். ஆனால் நாம் இப்போது லாக்டவுனை தளர்த்தி வருகிறோம். ஊரடங்கின் நோக்கம் தோல்வியடைந்துவிட்டது. நாம் இப்போது பார்ப்பது ஊரடங்கு தோல்வியின் விளைவுகளே. வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மத்திய அரசு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது?" எனக் கேள்வியெழுப்பி இருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்திற்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "நாம் ஊரடங்கை அமல்படுத்தியபோதும் காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. தற்போது அதைத் தளர்த்தும் போதும் விமர்சிக்கிறது. ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பாதிப்பு குறைவே.
ஒட்டுமொத்த உலகுமே இந்தியாவைப் பாராட்டினாலும், காங்கிரஸ் அதைச் செய்யாது. அவர்கள் இதிலும் அரசியல் விளையாட்டைத்தான் மேற்கொள்வார்கள். நாட்டு மக்களுடன் துணை நிற்க வேண்டிய நேரத்தில், மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார். 45 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது வீடுகளுக்குச் செல்ல 3,000 ரயில்கள் இயக்கப்பட்டன. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. எந்த காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இதுபோன்று நடந்துள்ளது?" எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.