
புதுச்சேரியில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது. அதையடுத்து கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி உருளையன்பேட்டை பகுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், மறைமலை அடிகள் சாலை, காந்தி மார்க்கெட் அருகே இயங்கிய மசாஜ் சென்டரில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 இளம் பெண்கள், 5 புரோக்கர்கள், 4 வாடிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர். 10 பெண்கள் காப்பகத்தில் விடப்பட்டனர். 9 பேர் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்களின் வயது ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்களில் ஒரு பெண் 17 வயது சிறுமி என தெரிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் கடந்த 2 மாதங்களில் 40 பேர் தொடர்ச்சியாக மசாஜ் சென்டர் வந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மசாஜ் சென்டருக்கு வந்து சென்ற 40 பேர் மீது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மசாஜ் சென்டர் நடத்தி வந்த தம்பதியின் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் வந்துள்ள வாடிக்கையாளர்களின் பட்டியலை எடுத்தனர். அதில் யார் யார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர் எனவும் விசாரித்தனர். அவர்களில் 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் 30 பேரை தேடி வருகின்றனர்.
இதனிடையே அதே பகுதியில், 6-ஆவது குறுக்கு தெருவில் மற்றொரு மசாஜ் சென்டர் இயங்குவதாகவும் அங்கு ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து பாலியல் தொழில் நடப்பதாகவும் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இயங்கிவந்த மசாஜ் சென்டரில் நேற்று முன்தினம் திடீரென சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த 4 பெண்களை மீட்டனர். மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் இரண்டு பேர் மற்றும் அங்கிருந்த 3 வாடிக்கையாளர்களை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் புதுச்சேரி சாரம் பாலாஜி நகர் மகி(31), அவரது மனைவி விஜயலட்சுமி(31) என்பது தெரியவந்தது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, சோலையூரை பூர்வீகமாக கொண்ட இவர்கள் இங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து அண்ணா நகரில் மசாஜ் சென்டர் பெயரில் இதை செய்துவந்தது தெரியவந்தது. அங்கு வாடிக்கையாளர்களாக வந்து பிடிபட்டவர்கள் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இரு வாலிபர், கேரளா இடுக்கி பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் ஒருவர் என்பதும் தெரியவந்தது. புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த போது ஆன்லைன் மூலம் மேற்கண்ட மசாஜ் சென்டரை தொடர்பு கொண்டு அங்கு பாலியலில் ஈடுபட வந்திருந்தது தெரியவந்தது.
மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் தம்பதி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிந்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் 5 பேரும் காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 4 பெண்களும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.