Police SI died in Manipur incident

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு, பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களால்150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Advertisment

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலும், சுதந்திர தின விழா உரையின் போது மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அங்கு தற்போது அமைதி நிலவி வருவதாக தெரிவித்தார். மேலும், மாநில முதல்வரும் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் காலை மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் குக்கி-ஸோ சமூகத்தைச் சேர்ந்த மூன்று பழங்குடியின மக்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இம்பால் மேற்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் எல்லை பகுதியில் இருக்கும் இரெங் மற்றும் கரம் கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள காங்குய் பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது. வாகனங்களில் வந்து இறங்கிய ஆயுத கும்பலை சேர்ந்தவர்கள் அங்கு இருக்கக்கூடிய கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் குக்கி - ஸோ சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் மேலும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் காவலர் பணியில் இருந்த துணை காவல் ஆய்வாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தால் இரண்டு காவலர்களுக்கு படு்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காங்போக்பி மாவட்டத்தில் மூன்று பழங்குடியினர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நாளுக்கு பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.