
மதுராவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து காவல்துறையினர் 581 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 700 கிலோ கஞ்சா உத்திரப்பிரதேச மாநிலம், மதுரா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தன. கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட 386 கிலோ கஞ்சா ஷெர்கா காவல் நிலையத்திலும், 196 கிலோ கஞ்சா நெடுஞ்சாலை காவல்நிலையத்திலும் வைக்கப்பட்டு இருந்தது.
நீதிமன்றத்தில் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்க, பறிமுதல் செய்த கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் கஞ்சா மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் பறிமுதல் செய்த மொத்த கஞ்சாவையும் ஒப்படைக்க உத்தரவிட்டது. நெடுஞ்சாலை காவல்நிலையத்தில் உள்ள கஞ்சா பொட்டலங்கள் மழையால் சேதமடைந்துவிட்டது என்று அந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் கூறியுள்ளார். ஷெர்கா காவல்நிலைய ஆய்வாளர், “ஸ்டோர் ரூமில் எலித்தொல்லைகள் அதிகமாக உள்ளதால், பறிமுதல் செய்து வைத்திருந்த கஞ்சா அனைத்தையும் எலிகள் சாப்பிட்டுவிட்டன. எனவே அனைத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.