
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (15/05/2021) காலை உயர்மட்ட அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசிகள் விநியோகம், ஆக்சிஜன் விநியோகம் மற்றும் மருத்துவ வசதிகள், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கிராமப் புறங்களில் வீடு வீடாக சென்று கரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கிராமப் புறங்களில் ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்வது மிகவும் அவசியம். நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்" என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.