ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'ஒடிசா ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். விபத்தில் 275 பேர் உயிரிழந்தும் இன்னும் யாரும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை. துயரமான இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்காமல் மத்திய அரசு எங்கும் ஓட முடியாது' எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் நடந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி, “ஹவுரா சூப்பர் விரைவு எக்ஸ்பிரஸ் மெதுவான ரயிலுக்கான தடத்தில் வந்துள்ளது. எனவே பிரதமரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக பதவி விலக வேண்டும். திறமையற்றவர்களை அல்லது திறமையான முதுகெலும்பு இல்லாதவர்களை அமைச்சர்களாக தேர்வு செய்வதில் நரேந்திர மோடி உலகப் புகழ் பெற்றவர். அதற்கான விலையை அவர் தற்போது கொடுத்து வருகிறார்” என ட்விட் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒலித்து வந்த குரல் தற்போது பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரே ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கூறியிருப்பது கட்சிக்குள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.