Skip to main content

கரோனாவிற்கு எதிரான போரில் இதுவே நமது ஆயுதங்கள் - பிரதமர் மோடி பேச்சு!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

pm modi

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்தது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் தொடர்ச்சியாகவும், கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளாலும் தற்போது இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது.

 

இந்தநிலையில், கரோனா நிலை குறித்து பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் இன்று (18.05.2021) காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை வருமாறு;


நம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு சவால்கள் உள்ளன. உங்கள் மாவட்டத்தின் சவால்களை நீங்கள் நன்கு புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் மாவட்டம் வெல்லும்போது நாடும் வெல்கிறது. உங்கள் மாவட்டம் தோற்கும்போது நாடும் தோற்கிறது. கரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் அனைவரும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். ஒரு வகையில், நீங்கள் இந்தப் போரின் கள தளபதிகள். கடந்த முறை (ஊரடங்கின்போது), நாம் விவசாயத் துறையை மூடவில்லை. வயல்வெளிகளில் கிராமவாசிகள் எவ்வாறு தனிமனித  இடைவெளியைப் பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். கிராமங்கள் தகவல்களைப் புரிந்துகொண்டு, அதை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிகொள்கிறன்றன. இது கிராமங்களின் பலமாகும்.

 

இந்த வைரஸுக்கு எதிரான போரில், உள்ளூர் கரோனா கட்டுப்பாட்டு மண்டலம், வேகமான பரிசோதனை மற்றும் சரியான, முழுமையான தகவல்களை மக்களுக்கு அனுப்புதல் ஆகியவை நமது ஆயுதங்களாகும். தற்போது, சில மாநிலங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால், நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கே நமது போராட்டம் என்று கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் அனைத்து கூட்டங்களிலும் நான் கோரிவருகிறேன். 

 

கரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தைப் பெரிய அளவில் அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதார அமைச்சகம் நெறிப்படுத்துகிறது. அடுத்த 15 நாட்களுக்கான ஒரு கால அட்டவணையை முன்கூட்டியே மாநிலங்களுக்கு வழங்க முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. இது, அடுத்த 15 நாட்களில் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி கிடைக்கும் என்பதையும், அதை செலுத்துவதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை அறியவும் உங்களுக்கு உதவும்.

 

இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்