நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நேற்று மக்களவையில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
மோடி பேசுகையில், "டிஜிட்டல் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியம் அடைகின்றன. டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறையில் பல லட்சம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. ஆனால் நாட்டின் இந்த வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை. கொரோனா தடுப்பு மருந்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளோம். இந்தியா உற்பத்தி நாடாக மாறிக் கொண்டு இருப்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி கொண்டுள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த தீவிரவாதமும் நடைபெறவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பை பல மடங்கு உயர்த்தி உள்ளோம். காங்கிரஸ் ஆட்சியின் போது நாட்டில் ஊழல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டன. காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டுக்கால ஆட்சியில் இந்தியாவின் 10 ஆண்டுக் காலத்தை இழந்துள்ளது. 2014க்கு முந்தைய 10 ஆண்டுகள் இந்தியா இழந்த 10 ஆண்டுகளாக நினைவு கூறப்படும். இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் குற்றங்கள் குறைந்துள்ளன. கல்வி, விளையாட்டு என பல துறைகளில் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. காஷ்மீரில் அமைதி திரும்பியதால் தான் ராகுல் காந்தி அங்கு சென்று கொடியை ஏற்ற முடிந்தது. ஜி 20 அமைப்பில் இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது" எனப் பேசினார்.
மோடி உரையாற்றத் தொடங்கிய போதே காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் "அதானி... அதானி" என முழக்கமிட்டனர். பின்னர் அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.