டெல்லியில் 18வது ஆசிய-பசிபிக் வணக மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், இந்தியா வந்துள்ளார். டெல்லியில் வந்து இறங்கிய அவர், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, “உக்ரைனில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதலுக்கு அரசியல் தீர்வைக் காண இந்தியா பங்களிக்க வேண்டும். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் இரு நாடுகளுக்கும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. பிரச்சனைகளுக்கு போர் தீர்வாக இருக்க முடியாது என்று இந்தியா எப்போதும் கருதுகிறது. அமைதியை மீட்டெடுப்பதற்கு அனைத்து பங்களிப்பையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.
20ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட உலகளாவிய மன்றங்கள், 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை என்பதை நானும் ஜெர்மன் அதிபர் ஓலாஃபும் ஒப்புக்கொண்டுள்ளோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உட்பட பலதரப்பு நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் தேவை. இந்தியா-ஜெர்மனி உறவுகள் இரண்டு திறமையான மற்றும் வலுவான ஜனநாயக நாடுகளின் உருமாறும் கூட்டாண்மை உறவாக இருக்கிறது. உலகம் பதற்றங்கள், மோதல்கள் மற்றும் நிச்சயமற்ற காலங்களை கடந்து செல்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், சட்டத்தின் ஆட்சி மற்றும் வழிசெலுத்தலின் சுதந்திரம் குறித்து தீவிர கவலைகள் உள்ளன.
கடந்த 2022 இல் பெர்லினில் நடந்த ஐஜிசி (IGC) இல், எங்கள் இருதரப்பு ஒத்துழைப்புக்கான முக்கிய முடிவுகளை நாங்கள் எடுத்தோம். இரண்டு ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் ஊக்கமளிக்கும் முன்னேற்றத்தை எங்கள் உறவுகள் மூலம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. பரஸ்பர நம்பிக்கையின் சின்னங்களாக மாறியுள்ளது. எங்கள் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும், நாங்கள் பல புதிய மற்றும் முக்கியமான முன்முயற்சிகளை எடுத்துள்ளோம்” என்று கூறினார்.