PM Modi said What is the deal between Ambani and Rahul?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. நான்காம் கட்டமாக தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள பிரதமர் மோடி இன்று தெலுங்கானாவின் கரீம்நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ஐந்து ஆண்டுகளாக, காங்கிரஸின் இளவரசர் ஒரு விஷயத்தை கோஷமிட்டார். அவரது ரஃபேல் விவகாரம் முடிவுக்கு வந்த பிறகு, அவர் ஒரு புதிய கோஷத்தை தொடங்கினார். ஐந்து தொழிலதிபர்கள், ஐந்து தொழிலதிபர்கள், ஐந்து தொழிலதிபர்கள் என மெல்ல மெல்ல அம்பானி-அதானி என்று சொல்ல ஆரம்பித்தார். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்பானி மற்றும் அதானியை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்.

Advertisment

இன்று தெலுங்கானா மண்ணில் இருந்து கேட்க விரும்புகிறேன், அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் எடுத்தார்கள் என்பதை அவர் அறிவிக்க வேண்டும்? ஒப்பந்தம் இருந்ததா? கறுப்புப் பணம் எவ்வளவு எடுக்கப்பட்டது? காங்கிரசுக்கு டெம்போக்கள் நிரம்பியதா? உங்களுக்குள் இருக்கும் டீலிங் என்ன? ஒரே இரவில் அம்பானி-அதானியை அசிங்கப்படுத்துவதை ஏன் நிறுத்தினீர்கள்? நிச்சயமாக ஏதோ தவறு இருக்கிறது. இதை நாட்டு மக்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்” என்று பேசினார்.