அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டுவரும் நிலையில், அயோத்தி நகரை மேம்படுத்த உத்தரப்பிரதேச அரசு, எல்.இ.ஏ அசோசியேட்ஸ் என்ற சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து திட்டங்களை வகுத்துவருகிறது. இந்நிலையில், இந்த அயோத்தி வளர்ச்சி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (26.06.2021) காணொளி வாயிலாக ஆய்வுசெய்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில துணை முதல்வர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த அயோத்தி வளர்ச்சி திட்டம், 18 பெரிய திட்டங்களை உள்ளடக்கியது. இந்த 18 திட்டங்களில் 16 திட்டங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டுவிடும் என கூறப்படுகிறது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளூர் பொருட்களை 'பிராண்டிங்' செய்தல், மதச் சுற்றுலாவை மேம்படுத்துதல், அயோத்தியில் இராமாயண கால மரங்களை வளர்ப்பது ஆகியவை அயோத்தி வளர்ச்சித் திட்டத்தில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.