இந்தியாவின் 75வது சுதந்திர தினம், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்திய பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி உரையாற்றுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பிரதமர் மோடி, செங்கோட்டையில் உரையாற்றவுள்ளார்.
இந்த சுதந்திர தின உரையில் தான் எதைப் பற்றியெல்லாம் பேசலாம் என்பது குறித்து பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் கருத்து கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களை, இந்திய ஒலிம்பிக் குழுவை செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், செங்கோட்டையில் விழா முடிந்த பிறகு பிரதமர் மோடி, இந்திய ஒலிம்பிக் குழுவை தனது இல்லத்திற்கு அழைத்து உரையாடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டோக்கியோவிற்குச் சென்ற இந்திய ஒலிம்பிக் குழுவில் 127 வீரர்கள் உட்பட பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 228 பேர் இருப்பது குறிப்பிடத்தக்கது.