பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தற்போது 53 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில், தற்போதைய மந்திரி சபையை விரிவாக்கவும், சில அமைச்சர்களின் துறையை மாற்றவும் பாஜக முடிவு செய்துள்ளதாவும், இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்தநிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடி, இன்று (06.07.2021) தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், இன்று மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ளும் இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை மனதிற்கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மந்திரி சபையில் 79 பேர்வரை இடம்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.