இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிய யோசனைகளை உருவாக்கவும், வளர்ந்துவரும் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்களால் ஏற்படும் வாய்ப்புகள் மற்றும் சவால்களைப் பற்றி விவாதிக்கவும், பொதுவான புரிதலை நோக்கி செயல்படவும் அரசியல், வணிக மற்றும் அரசாங்கத் தலைவர்களை ஒன்றிணைக்கும் சிட்னி உரையாடலில் இன்று (18.11.2021) சிறப்புரை ஆற்றினார்.
இந்தியாவின் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சி மற்றும் புரட்சி என்ற கருப்பொருளில் பிரதமர் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் ஐந்து முக்கியமான மாற்றங்கள் நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.
சிட்னி உரையாடலில் பிரதமர் மோடி பேசியதாவது, “இந்தியாவில் ஐந்து முக்கிய மாற்றங்கள் நடைபெற்றுவருகிறது. முதலாவதாக, உலகின் மிக விரிவான பொது தகவல் உள்கட்டமைப்பை நாங்கள் உருவாக்கிவருகிறோம். 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தைக் கொண்டுள்ளனர். 600,0000 கிராமங்களைப் பிராட்பேண்ட் மூலம் இணைக்கும் பாதையில் இருக்கிறோம். உலகின் மிகவும் செயல்திறன்மிக்க கட்டணக் கட்டமைப்பான யுபிஐயை நாங்கள் உருவாக்கியுள்ளோம். 800 மில்லியனுக்கும் அதிகமானோர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், 750 மில்லியன் பேர் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துகின்றனர்.
இரண்டாவதாக, அதிகாரமளித்தல், நன்மைகள் - நலன்களை வழங்குதல் ஆகியவை அடங்கிய நிர்வாகத்திற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கையை மாற்றிவருகிறது.
மூன்றாவதாக,உலகின் மூன்றாவது பெரிய மற்றும் வேகமாக வளரும் சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. ஆரோக்கியம் முதல் தேசிய பாதுகாப்பு வரை அனைத்திற்கும் தீர்வுகளை வழங்க சில வாரங்களுக்கு ஒருமுறை புதிய யூனிகார்ன்கள் வருகின்றன.
நான்காவதாக, வளங்களைப் பயன்படுத்தவும், பல்லுயிர் பாதுகாப்பிற்காகவும் இந்தியாவின் தொழில் மற்றும் சேவைத்துறைகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுவருகின்றன.
ஐந்தாவதாக, 5ஜி மற்றும் 6ஜி போன்ற தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில், உள்நாட்டுத் திறனை வளர்ப்பதில் நாங்கள் முதலீடு செய்கிறோம்; செயற்கை நுண்ணறிவுத்துறையில் இந்தியா முன்னனி நாடுகளில் ஒன்றாகும்.” இவ்வாறு மோடி தெரிவித்தார்.
மேலும் இந்த உரையின்போது பிரதமர் மோடி, "உதாரணமாக, கிரிப்டோகரன்சியையோ அல்லது பிட்காயினையோ எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து ஜனநாயக நாடுகளும் இதில் இணைந்து செயல்படுவதும், தவறான கைகளுக்குச் சென்றுவிடாமல் இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம். தவறான கைகளுக்கு என்றால் அது நமது இளைஞர்களைக் கெடுத்துவிடலாம்" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.