இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் ஆறு கட்டங்களாக 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, இறுதிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம் என உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின்னர், ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், “ஜார்க்கண்ட் மீது ஒரு பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது, அது ஊடுருவல். சந்தால் பர்கானாஸ் ஊடுருவல் சவாலை எதிர்கொள்கிறது. பல பகுதிகளில், பழங்குடியினரின் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருவதால், ஊடுருவல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊடுருவல்காரர்கள் பழங்குடியினரின் நிலங்களை அபகரிக்கின்றனர். பழங்குடியின பெண்கள், ஊடுருவல்காரர்களின் இலக்காக உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. அவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
பழங்குடியின பெண்கள், 50 துண்டுகளாக வெட்டப்படுகிறார்கள். உயிரோடு எரிக்கப்படுகிறார்கள். ஒருவரின் நாக்கு பிடுங்கப்பட்டது. பழங்குடியின பெண்களைக் குறிவைக்கும் இவர்கள் யார்? ஜே.எம்.எம் அரசாங்கம் ஏன் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது? ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்த போதிலும், ஜார்க்கண்டின் ஒரு மாவட்டத்தில், அது வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இந்துக்களுடன் தொடர்புடையது அல்ல, கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடையது. ஞாயிற்றுக்கிழமை 200-300 ஆண்டுகளாக விடுமுறையாக இருந்தது. இப்போது, அவர்கள் கிறிஸ்தவர்களோடும் சண்டை போடுகிறார்கள்.
2014க்கு முன்பு காங்கிரஸ் 24×7 கொள்ளையில் ஈடுபட்டதால் மோசடிகள் வாடிக்கையாக இருந்தன. ஆனால், நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதை நிறுத்தினேன். ஜார்க்கண்டில், ஜே.எம்.எம் மற்றும் காங்கிரஸும் பரவலான கொள்ளையை நடத்தி வருகிறார்கள். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.