Skip to main content

“ஹரியானா அரசின் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கேட்க முடியும்” - ஆம் ஆத்மி அமைச்சர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 pleads the Delhi minister to Haryana government

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்துக் கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

சில தினங்களுக்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியிருந்தார். மேலும், உ.பி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் டெல்லிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி இன்று (17-06-24) வசிராபாத் தடுப்பணையை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வசிராபாத் அணையில் இருந்து தண்ணீர் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. வசிராபாத் அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்போது ஆற்றுப் படுகை தெரியும் அளவுக்கு நீர்மட்டம் குறைந்துவிட்டது. டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்க ஹரியானா அரசிடம் நாம் முறையிட மட்டுமே செய்யலாம். 

ஹரியானா மாநிலம் யமுனையில் இருந்து தண்ணீர் விடாத வரை, டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடரும். முனாக் கால்வாயில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. மறுபுறம், வசிராபாத் அணைக்கு தண்ணீர் வரவில்லை. ஹரியானா அரசின் முன் கைகளை கட்டிக்கொண்டு நின்று டெல்லி மக்களின் உயிர் அவர்களின் கையில் உள்ளது என்று என்னால் கூற முடியும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆளுநருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister Amit Shah consultation with the Governor

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி  5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று (16.07.2024) பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (17.07.2024) ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Union Minister Amit Shah consultation with the Governor

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள்,  மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ  சந்திப்பை மேற்கொண்டேன்.  நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வரும் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. 

Next Story

மத்திய கல்வி அமைச்சருடன் ஆளுநர் ஆர். என். ரவி சந்திப்பு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
TN Governor RN Ravi meeting with Union Education Minister

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக சட்டப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28 ஆம் தேதி (28.06.2024) கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை தாயரித்திருந்தது. 

TN Governor RN Ravi meeting with Union Education Minister

இந்நிலையில் 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி சார்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நான் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழ்நாட்டில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன்.

திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின்  நலனில் ஆழ்ந்த  அக்கறை கொண்ட அவருக்கு மிகவும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.