இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தேவை கடுமையாக அதிகரித்திருந்தது. டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுபாடும் ஏற்பட்டது. முதல் அலையில் அதிகபட்சமாக ஆக்சிஜன் தேவை ஒருநாளைக்கு 3095 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தேவை ஒருநாளைக்கு 9,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தசூழலில், தற்போது மீண்டும் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ஒரேநாளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பும் ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தநிலையில் மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மருத்துவ ஆக்சிஜன் தயார் நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவ ஆக்சிஜன் தயார்நிலை தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த, போதுமான மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பயனுள்ள வழிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார்.