ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜி20 அமைப்பின் மாநாடு கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது அவர் பேசுகையில், "கொரோனா தொற்று காரணமாக உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ரசிய - உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் அத்தியாவசியப் பொருட்களான உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழலில் வாரணாசி மாநாட்டில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் மக்களுக்கு நல்ல பலன் அளிக்கும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நமது செயல்பாடுகள் நேர்மையாக இருக்க வேண்டும். நம்முடைய முயற்சிகள் அனைவருக்கும் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். இந்தியாவில் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 100க்கும் மேற்பட்ட பின் தங்கிய மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த மாவட்டங்கள் இப்போது நமது நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளன.
ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து தங்களது நாடுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். இந்தியாவில் டிஜிட்டல் மயத்தால் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். எங்களது அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்தியாவில் ஆறுகள், மரங்கள், மலைகள், இயற்கை என அனைத்திற்கும் மரியாதை செலுத்தி வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகிறோம். கடந்த ஆண்டு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளருடன் இணைந்து லைஃப் இயக்கத்தைத் தொடங்கி வைத்தேன். இதன் மூலம் பருவ நிலை மாற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட வளர்ச்சி இலக்குகளை அடைய பாலின சமத்துவம், மகளிருக்கு அதிகாரமளித்தல் அவசியம்.
இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன் நின்று விடவில்லை. அதையும் தாண்டி பெண்கள் தலைமை தாங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்தியாவில் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான முகவர்களாக பெண்கள் திகழ்கின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை ஜி20 அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பின்பற்ற வேண்டும். மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் புனித தலமான வாரணாசி நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் வாரணாசியின் எழுச்சியை தங்களால் உணர முடியும். இது என்னுடைய பாராளுமன்றத் தொகுதி என்பதால் உரிமையுடன் இதைக் கூறுகிறேன். கங்கை ஆரத்தியை காணுங்கள். சாரநாத்தையும் காணுங்கள். இவை உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும்" என உரையாற்றினார்.