ஹரியானா மாநிலத்தில் கன்வார் யாத்திரை சென்ற பக்தர்கள் தங்கள் மீது மோதிய காரை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவாலயங்களில் அபிஷேகம் செய்யும் பழக்கம் இந்துக்கள் மத்தியில் உள்ளது. இதற்காக செல்லும் யாத்திரை கன்வார் யாத்திரை என அழைக்கப்படும். நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கன்வார் யாத்திரையாக பக்தர்கள் உத்ரகாண்டிற்கு வருகை தருவதால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில், ஹரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியில் யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியது. இதில் சில பக்தர்கள் காயமடைந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, ஆவேசமடைந்த சிவபக்தர்கள் அந்தக் காரை அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்தினார்கள். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.