
முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்து பல மணிநேரம் பதுங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்கத்தாவின் காலிகாட் பகுதியில் 34பி ஹரிஸ் சட்டர்ஜி வீதியில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீடு உள்ளது. இந்த நிலையில், நள்ளிரவு 01.00 மணியளவில் முதலமைச்சரின் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்து நபர் ஒருவர், ஒரு மூலையில் பதுங்கியிருந்துள்ளார். அவர் பதுங்கியிருப்பதை காலையில் கண்டுபிடித்த முதலமைச்சரின் பாதுகாவலர்கள், அந்த நபரை மடக்கிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
முதலமைச்சரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து, அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சருக்கான பாதுகாப்பை அம்மாநில காவல்துறை பலப்படுத்தியுள்ளது.