கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருக்கும் கிராமம் ஹெக்கோதாரா. இக்கிராமத்தில் லிங்காயத்துகள் தெருவில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் திருமண நிகழ்ச்சியில் அருகில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பெண்ணிற்கு தாகம் எடுத்ததால் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியுடன் இணைந்த குழாயில் தண்ணீர் குடித்துள்ளார். இதனைக் கண்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அப்பெண்ணைத் திட்டி அவர் தண்ணீர் குடிப்பதை நிறுத்தச் செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், தொட்டியில் இருந்த நீர் முழுவதையும் வெளியேற்றி தொட்டியை மாட்டுக்கோமியம் தெளித்து சுத்தம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட பொறுப்பு அமைச்சர் சோமன்னா சாம்ராஜ்நகர் பகுதிக்கு நேரடியாகச் சென்று நடந்ததைக் குறித்து விசாரித்தார். அதுமட்டுமின்றி, இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க சமூகநலத்துறை மற்றும் மாவட்ட ஆணையருக்கும் கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில், “இச்சம்பவத்தில் என்ன நடந்தது என்று சரியாகத் தெரியாது. இது குறித்த விவரங்களைச் சேகரித்து அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்பாராத விதமாக இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்” எனக் கூறினார்.