ரயில் நிலையத்தில் கரோனா சோதனை செய்துகொள்வதற்கு பயந்து பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில் 29 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சற்றே குறைந்திருந்த கரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதன் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இறங்கியுள்ளன. அதேபோல, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் மூலம் தங்கள் மாநிலத்தில் கரோனா பரவாமல் தடுக்க, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவும் பல மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில், பீகாரில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அம்மாநிலத்திற்கு வரும் மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நிதிஷ்குமார் சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, பீகார் ரயில்நிலையங்களில் பயணிகளுக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை (15.04.2021) இரவு பீகாரின் பக்ஸார் ரயில் நிலையத்திற்கு பாட்னாவிலிருந்து வந்த ரயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு சோதனை செய்வதற்காக அங்கிருந்த ஊழியர்கள் முயன்றபோது, அவர்கள் ரயில் நிலையத்திலிருந்து சிதறி வெளியே ஓடியுள்ளனர். கரோனா சோதனை செய்வதற்கு பயந்து மக்கள் ரயில் நிலையத்திலிருந்து ஓடும் வீடியோ இணையதளத்தில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து அந்த ரயில் நிலையத்தில் இருந்த சுகாதார ஊழியர் கூறுகையில், "நாங்கள் அவர்கள் வெளியேறுவதைத் தடுத்தபோது, அவர்கள் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின்போது ரயில் நிலையத்தில் போலீஸார் யாரும் இல்லை. பின்னர், ஒரு பெண் காவலர் மட்டும் வந்தார். ஆனால், தான் தனியாக இருப்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறிவிட்டார்" எனக் கூறினார். இந்நிலையில், மக்கள் சோதனை செய்ய அச்சப்படத் தேவையில்லை எனவும், கரோனா பரவலைத் தடுப்பதில் இது முக்கியமான வழிமுறை எனவும் சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
यह दृश्य कल रात बक्सर स्टेशन का हैं और ये यात्री पुणे -पटना से उतरे हैं और कोरोना जाँच ना कराना पड़े इसलिए भाग रहे हैं @ndtvindia @Anurag_Dwary @suparba pic.twitter.com/cWxDDoP26X
— manish (@manishndtv) April 16, 2021