Skip to main content

ஆரவாரமாக தொடங்கிய பேடிஎம் ஐபிஓ! முதலீட்டாளர்கள் ஆர்வம்!!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

PayTm IPO that started with a bang! Investors are interested !!

 

பேடிஎம் ஐ.பி.ஓ. வெளியீடு திங்களன்று (09.11.2021) தொடங்கியது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஐ.பி.ஓ. வெளியீடாக பார்க்கப்படுகிறது. 

 

ஏனெனில், பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் ஒரே அடியாக 18,300 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டமிட்டு களமிறங்கியுள்ளது பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ். பொதுப்பங்கு வெளியீட்டின் முதல் நாளான நேற்றே 18 சதவீதம் சந்தா செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒதுக்கப்பட்ட 89 லட்சத்து 98 ஆயிரத்து 76 பங்குகளில் 43 லட்சத்து 65 ஆயிரத்து 420 பங்குகள் சில்லரை விற்பனை பகுதிக்கு சந்தா செலுத்தப்பட்டது. மொத்த பொதுப்பங்குகளின் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சத்து 89,422 ஆகும். 

 

பேடிஎம் நிறுவனம் திரட்டவுள்ள 18,300 கோடி மொத்த முதலீடு 8,300 கோடி ரூபாய் மதிப்பிற்கு புதிய ஈக்விட்டி பங்குகள் வழங்குவதையும், தற்போதுள்ள அந்நிறுவன பங்குதாரர்களால் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனைக்கான சலுகையையும் (ஓஎப்எஸ்) கொண்டுள்ளது. ஒரு பங்குக்கு 2,149 ரூபாய் என்ற விலையில் சந்தா செலுத்திய ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ஏற்கனவே 8,235 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. பிளாக்ராக், கனடா பென்ஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டு, சிங்கப்பூர் மற்றும் அபுதாபி சவ்ரின் ஃபண்ட் ஆகிய நிறுவனங்கள் முதலீடுகளைச் செய்திருக்கின்றன. 

 

ஐ.பி.ஓ. ஒரு பங்கின் விலை 2,080 முதல் 2,150 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி (புதன்கிழமை) வரை சந்தா பெற முடியும். சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு லாட் முதல் அதிகபட்சம் 15 லாட் வரை ஏலம் கோரலாம். ஒரு லாட் என்பது 6 பங்குகள் ஆகும். அதன்படி, ஐ.பி.ஓ. வெளியிடப்பட்ட நேற்று, முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 சதவீதமும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி 2 சதவீதமும் சந்தா செலுத்தப்பட்டது. மேலும், தகுதி வாய்ந்த (கியூஐபி) முதலீட்டாளர்கள் மூலம் 2.63 கோடி பங்குகளில் 16.78 லட்சம் பங்குகள் ஏலம் எடுத்துள்ளனர். 

 

பேடிஎம் நிறுவனம், தனது 18,300 கோடி ரூபாய் ஐ.பி.ஓ.வில் 50 சதவீத பங்குகளை ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்துவருகிறது. அதேநேரம், இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக உள்ள சீனாவின் ஆன்ட் குரூப் மற்றும் ஜப்பான் சாப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்கள் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருந்த பெரும் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. 

 

ஏற்கனவே டிஜிட்டல் பேமெண்ட் வர்த்தகத்தில் வெற்றிகரமாக இயங்கிவரும் நிறுவனம் என்பதால், முதலீட்டாளர்களிடையே பேடிஎம் ஐ.பி.ஓ. மீது பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Paytm Passtag will be invalid from tomorrow

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது என மத்திய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் எளிமையாக சுங்க கட்டணங்களை செலுத்துவதற்காக பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பே.டி.எம் பாஸ்டேக் மூலமும் சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என தெரிவித்துள்ள நெடுஞ்சாலை ஆணையம், நாளைக்குள் வாடிக்கையாளர்கள் பே.டி.எம் பாஸ்டேக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் இருப்பு தொகையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் ரீசார்ஜ் செய்ய முடியாது எனவும், அபராதமின்றி சுங்கசாவடிகளைக் கடந்து செல்ல பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் வேறு வங்கிக்கு கணக்கை மாற்ற வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.

விதிமீறல் புகாரில் சிக்கிய பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஆர்பிஐ ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் ஆர்பிஐ கட்டுப்பாடுகளை தொடர்ந்து பே.டி.எம் பாஸ்டேக் வைத்துள்ளோருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அறிவுறுத்தலை வேண்டுகோளாக விடுத்துள்ளது.

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.