எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக, மக்களவையை பிப்ரவரி 8- ஆம் தேதி வரை ஒத்திவைத்து, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29- ஆம் தேதி கூடியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் 2021- 2022 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அதன்பின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ச்சியாக, மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்படுகிறது. இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (05/02/2021) மாலை 04.00 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் மக்களவை மாலை 06.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கூடியபோது உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை பிப்ரவரி 8- ஆம் தேதி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.