மக்களவையில் இன்று (11/03/2020) டெல்லி வன்முறை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.
உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 25- ஆம் தேதிக்கு பின் எந்த விதமான வன்முறையும் பதிவாகவில்லை. டெல்லி வன்முறையை வைத்து அரசியல் செய்வது மட்டும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. டெல்லியில் வன்முறை மேலும் பரவாத வகையில் போலீஸார் சிறப்பாக செயல்பட்டனர். டெல்லி வன்முறையை கண்காணிக்கவே ட்ரம்ப் உடனான பயண திட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சியினர் பொறுப்பில்லாமல் வெளிநடப்பு செய்வது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்பட்டதாக கூறுவது தவறு; இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்டறியப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 300 பேருக்கு டெல்லி வன்முறையில் தொடர்புடையது தெரிய வந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டோரின் சொத்துக்களை பறிமுதல் செய்து உடைமைகளை இழந்தவர்களுக்கு தரப்படும். டெல்லி வன்முறையில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்; 526 பேர் காயமடைந்துள்ளனர்; 351 வீடுகள் சேதமடைந்துள்ளனர்". இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதனிடையே அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேசிக் கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.