நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று சவானின் முதல் திங்கட்கிழமை. இந்த புனிதமான நாளில் ஒரு முக்கியமான அமர்வு தொடங்குகிறது. சவானின் முதல் திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று முழுவதும் இது ஒரு நேர்மறையான அமர்வாக இருக்க வேண்டும்.
கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த அரசு, மூன்றாவது முறையாக முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வது பெருமைக்குரிய விஷயம். எங்களின் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான திசையை இன்றைய பட்ஜெட் தீர்மானிக்கும். இந்த பட்ஜெட் நமது விக்சித் பாரத் கனவுக்கு வலுவான அடித்தளமாக அமையும். அனைத்துக் கட்சிகளும் கட்சி எல்லைகளுக்கு அப்பால் எழுந்து நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து, அடுத்த 4.5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் இந்த கண்ணியமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் 140 கோடி மக்களால் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் குரலை நசுக்கும் முயற்சியை நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சுமார் 2.5 மணி நேரம் பிரதமரின் குரலை நசுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாட்டு மக்கள் எங்களை நாட்டுக்காக சேவையாற்ற அனுப்பி வைத்துள்ளனர். கட்சிக்காக அல்ல. இந்த நாடாளுமன்றம் நாட்டுக்கானது, கட்சிக்காக அல்ல” எனத் தெரிவித்தார்.