உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் டிசம்பர் 17 முதல் 19 ஆம் தேதி வரை இந்து சாமியார்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியவர்கள், வன்முறையைத் தூண்டும் வகையிலும், முஸ்லிம்களைப் படுகொலை செய்ய வேண்டும் எனப் பேசினர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.
இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக தாமதமாக வழக்கு பதிவு செய்துள்ள உத்தரகாண்ட் காவல்துறையினர், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அதேநேரத்தில் 76 முன்னனி வழக்கறிஞர்கள், இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தநிலையில் பாகிஸ்தான், இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை அழைத்து ஹரித்துவார் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தூதரகத்தின் பொறுப்பாளருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, இந்திய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வதற்கு இந்துத்துவா ஆதரவாளர்கள் விடுத்த வெளிப்படையான அழைப்பு குறித்து தங்களின் கவலையை இந்திய அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் தனது அறிக்கையில், வன்முறைக்கு அழைப்பு விடுத்த சாமியார்கள் எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும், இந்திய அரசாங்கமும் வன்முறைக்கான அழைப்பை இதுவரை கண்டிக்கவுமில்லை அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவுமில்லை என்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளது.
வழக்கமாக இந்தியாதான், பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்கும். அரிய நிகழ்வாக இந்திய சிறுபான்மையினர் தொடர்பாக பாகிஸ்தான் இந்திய தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.