பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் மத்திய உள்துறை அமைச்சகம், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு குறித்து பேசி பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, "சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சில தேசவிரோத சக்திகள் இதுபோன்ற செயல்களை செய்கின்றனர். அரசு விழிப்புடன் உள்ளது. குற்றவாளிகளைத் தப்பவிட மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப்துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, " நம்முடையது எல்லையோர மாநிலம். வெளிநாட்டு சக்திகளின் பங்கு உட்பட எந்த சாத்தியக்கூறையும் நிராகரிக்க முடியாது. மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் உள்ளது. உள்ளது" என்றார்.
தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்த சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், "(குண்டுவெடிப்பில் சிக்கியவர்களுக்கு) சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் வெடிகுண்டு வெடித்த சப்தம் கட்டடம் இடிந்து விழுவதைபோல் கேட்டதாக கூறியுள்ளார். நாம் நிலையாக இருப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை" என கூறியுள்ளார்.