இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி நேற்று (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
இந்தச்சூழலில் இந்தியாவின் தோல்வியையடுத்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை, ஒரு தரப்பினர் சமூகவலைதளங்களில் கடுமையாக வசை பாடி வருகின்றனர். அதேநேரத்தில் அவருக்கு ஆதரவாகவும் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அசாதுதீன் ஓவைசி, முகமது ஷமி சமூகவலைதளங்களில் குறிவைக்கப்படுவது முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத்தையும், வெறுப்பையும் காட்டுவதாக அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "நேற்றைய போட்டிக்காக முகமது ஷமி சமூகவலைதளங்களில் குறி வைக்கப்படுவது, முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத்தையும், வெறுப்பையும் காட்டுகிறது. கிரிக்கெட்டில் நீங்கள் வெல்வீர்கள் அல்லது தோல்வியடைவீர்கள். அணியில் 11 பேர் இருக்கிறார்கள் ஆனால் முஸ்லிம் வீரர் மட்டும் குறி வைக்கப்படுகிறார். பாஜக அரசு இதைக் கண்டிக்குமா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான், முகமது ஷமி மீது சமுகவலைதளத்தில் வசைபாடப்படுவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா தோல்வியடைந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் நானும் அங்கம் வகித்துள்ளேன். ஆனால் என்னை யாரும் பாகிஸ்தானுக்கு போகும்படி சொல்லவில்லை. நான் சில வருடங்களுக்கு முந்தைய இந்தியாவைப் பற்றிப் பேசுகிறேன். இந்த முட்டாள்தனம் நிறுத்தப்படவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் முன்னாள் இந்திய வீரர் சேவாக், "முகமது ஷமி மீதான ஆன்லைன் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறோம். அவர் ஒரு சாம்பியன். எந்தவொரு ஆன்லைன் கும்பலை விடவும் அதிகமாக, இந்தியத் தொப்பியை அணிந்திருப்பவர்கள் இந்தியாவை தங்கள் இதயத்தில் வைத்திருப்பார்கள். உன்னுடன் இருக்கிறேன் ஷமி. அடுத்த ஆட்டத்தில் நீ யாரென்று காட்டு" எனக் கூறியுள்ளார்.